Sunday, May 17, 2009

ஷேர் ஆட்டோ கவிதை பயணங்கள்



பீக் அவ‌ர்ஸ்லில் பேருந்துக்காக காத்திருக்கும் பரபரப்பான காலைப் பொழுதுக‌ளில், பத்து ரூபாய் கணக்கு பார்க்காமல்,ஒரு சில அசெளகரியங்களையும் அலட்டி கொள்ளாமல், ஷேர் ஆட்டோக்க‌ளை நாடுப‌வ‌ர்கள், குறித்த‌ நேர‌த்தில் இல‌க்கை அடைத‌லோடு ம‌ட்டுமின்றி, இன்னும் ப‌ல‌ சுவார‌ஸிய‌மான‌ சுகானுபவ‌ங்க‌ளை பெறுகிறார்க‌ள்.

என்னைப் பொறுத்த‌ம‌ட்டில் சென்னையின் ம‌ற்ற ப‌குதிக‌ளைக் காட்டிலும்,வ‌ட‌சென்னை ராய‌புர‌ம்,பீச் ஸ்டேஷ‌ன்,வியாச‌ர்பாடி ஏரியாக்க‌ளில் ஷேர் ஆட்டோக்க‌ளில் ப‌ய‌ண‌ம் செய்தலே அலாதியானது.பாகுபாடுக‌ளின்றி,நடுத்த‌ர‌ வ‌ர்க்க‌ நாதாரிகளுக்காக‌வே உருவாக்க‌ப்பட்ட‌ தேர் இந்த‌ "ஷேர்" ஆட்டோக்க‌ள்.

க‌ட்டுப்பாடுக‌ளும்,பார‌ம்ப‌ரிய‌மும் மிக்க‌ த‌மிழ் க‌லாச்சார ஏடுக‌ளின் வரலாற்றில் ஆணும் பெண்ணும் அருகருகே அமர்ந்து பயணம் செய்யும் சமத்துவத்தை கொணர்ந்து, ஒரு மாபெரும் புரட்சி செய்த பெருமை சென்னை ஷேர் ஆட்டோக்களையே சாரும்.

ஷேர் ஆட்டோக்க‌ள் அறிமுக‌ப் ப‌டுத்த‌ப்ப‌ட்ட கால‌கட்ட‌ங்க‌ளில்,குறைந்த‌ க‌ட்ட‌ண‌த்தில் கார் ஸ்டிய‌ரிங் வைத்த‌ விக்ர‌ம் மினிடோர் ஆட்டோக்க‌ள் தான் முத‌லில் மாந‌கராட்சியை வ‌ல‌ம் வ‌ந்த‌ன‌.நாங்க‌ள் அதை மூட்டைப்பூச்சி ஆட்டோ என்று செல்ல‌மாக‌ அழைப்போம்.

ஆறு பேர் ம‌ட்டுமே அமர‌லாம் என்ற‌ ச‌ட்ட‌ங்க‌ளை மீறி, அதிக‌ப‌ட்ச‌ம் ட‌ச‌ன் ஆட்க‌ளை உள்ளே திணித்துகொண்டு, குறுக‌லான‌ ச‌ந்துக‌ளில் கூட, மொனோக்கோ கிராண்ட்பிரீயில், மைக்கேல் ஷீமாக்கர்க‌ளாக‌ சீறிப் பாயும் நம்மூர் ஷேர் ஆட்டோ டிரைவர்களின் சாகசங்கள் எண்ணிலடங்கா.

இர‌ண்டாவ‌து சிக்ன‌லில் நிற்கும் போதே, மூன்றாவ‌து சிக்ன‌லில் இருக்கும் டிராபிக் மாமாவின் இருப்பு முன்கூட்டியே அலைபேசியில் ந‌ம்ம‌வ‌ர்க்கு தெரிவிக்க‌ப்பட்டு விடும்.மாமாவின் க‌ண்க‌ளில் ம‌ண்ணைத் தூவிவிட்டு,ஸ்டிய‌ரிங்கை ஒரு சுழ‌ற்று சுழ‌ற்றி த‌ப்பிக்கும் திக் திக் நிமிட‌ங்களும், மயிர்கூச்செறிய செய்யும் ஒரு திரில்ல‌ர் ப‌ட‌ம் பார்த்த‌ அனுப‌வமும் ப‌ய‌ணிக‌ளுக்கு இல‌வ‌ச‌ம்.

நமீதா,மும்தாஜுக்கு பிறகு அதிகம் குலுக்கியவர்கள் பட்டியலில் நம்மூர் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களைத் தான் சொல்ல வேண்டும்.அத்த‌னை ந‌ளின‌ம்.ப‌ல‌பேருக்கு அது ஊஞ்ச‌லாக‌ ம‌ட்டுமே இருக்கும்.

தாலிக‌ட்டிய‌ ம‌னைவியோடு கூட‌ அத்த‌னை நெருக்க‌மாக‌ அம‌ர்ந்து போயிருக்க‌ மாட்டோம்.அவ்வள‌வு அன்யோன்ய‌ம்.ப‌ழ‌க்கப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளாயிருந்தால் ப‌ர‌வாயில்லை.ஆனால் புதிதாய் ஷேர் ஆட்டோக்க‌ளில் ஏறுபவர்கள் பாடு தான் திண்டாட்டம்.கூனி கூசி குறுகிப்போய் மனிதர் ஒரு ஓரமாக கால்களை மடக்கி அமர்ந்திருப்பார் பக்கத்தில் பூ கட்டி கொண்டிருக்கும் நம்ம மினிமா அக்காவின் வசைகளை கேட்டபடி.

இந்த அலப்பறைகளை குவியாடியில் பார்த்து கொண்டே,டிரைவரின் இடதுபுறம் அசோக‌ சின்ன‌த்தின் சிங்க‌ம் போல‌ அம‌ர்ந்து கொண்டு, "மின்ட்ட்டூ..ஸ்டான்லீ..ஆர்ட்ஸ் காலேய்ய்ய்ஜே" என‌ நாமும் சில‌நேர‌ங்க‌ளில் கூவி, பார்டைம் ஷேர் ஆட்டோ க‌ண்ட‌க்ட‌ர் வேலை பார்ப்ப‌து ம‌ன‌துக்கு ஒரு இந்த‌ஸ்தை அளிக்குமென்ப‌தில் ஐய‌மில்லை.

ச‌ம‌ய‌ங்க‌ளில்,பாதிவ‌ழியிலே ந‌ம்ம‌ தேர் பிரேக் ட‌வுன் ஆக,ஃபார்ம‌லான‌ உடையில், மென்பொருள் ஐடி கார்டுக‌ளோடு நாமும் இற‌ங்கி த‌ள்ள‌ வேண்டிய‌ நிர்ப‌ந்தத்துக்கு ஆளாக்க‌ப்ப‌டுகிறோம் என்றாலும், உள்ளே மேல்த‌ள‌த்தில் அம‌ர்ந்திருக்கும் சிட்டுக்குருவிக‌ளின் புன்ன‌கைக‌ளை ப‌ரிசில் பெறுகிறோம் என்ற‌ ஒரு உண்மையை க‌ருத்தில் கொள்ள‌ வேண்டும்.

இந்த அரைம‌ணி நேர‌ அற்புத‌ ப‌ய‌ணங்களில் குறைந்த பட்சம் ஒரு சிறுக‌தைக்கான‌ க‌ரு நிச்சயம் கிடைத்து விடும்.முக‌ம் பார்க்க‌ முடியாவிட்டாலும் உள்ளூர‌ ஒரு நெருக்க‌த்தோடு அம‌ர்ந்திருக்கும் ம‌னித‌ர்க‌ள் தான் எத்த‌னை ர‌க‌ம்?

அத்த‌னை பேரையும் ஒரு க‌ட்ட‌த்தில் ஒன்றாக்கி விடுவ‌து இந்த‌ ஷேர் ஆட்டோக்க‌ள் தான்.

சென்னை ந‌க‌ர‌ ம‌க்க‌ளின் அன்றாட வாழ்வில் இர‌ண்ட‌ற‌ க‌ல‌ந்த‌ ஷேர் ஆட்டோக்க‌ளுக்கு
கீழே என்னுடைய க‌வுஜையை டெடிகேட் செய்கிறேன்.

தட தட சத்தமும்,
வியர்வையுடன் கலந்த டீசல் வாடையும்,
இரண்டாம் தளத்தில் அமர்ந்திருக்கும் போது
'பின்னால்' குத்தும் ஆணியும்,
முதுகில் மிதிக்கும் இளம்பெண்களின் செருப்பும்.
அவ்வ‌ப்போது நிக‌ழும் விப‌ரீத‌ விப‌த்துக‌ளும்
"அஞ்சு ரூபா சில்ற‌ இல்லீயா ??........"


மத்திய தரவர்க்க வாழ்வியலின் த‌விர்க்க‌ முடியா அடையாள‌ங்க‌ள்.

******************************************************************

0 comments:

Post a Comment

 
Powered by Blogger | Printable Coupons