முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் மட்டுமின்றி, இன்னும் இஸ்லாத்தை சேர்ந்த சகோதரர்களே இக்கருத்தில் உறுதியானதொரு கருத்தை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்ற ஆதங்கத்தினாலும் இவ்விஷயத்திற்கு நல்லதொரு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற காரணத்தாலும் மட்டுமே இப்பதிவை எழுதுகிறேன்.
இதை ஒரு பிரச்சார மற்றும் ஒருதலை பட்சமான பதிவு என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்ற தயக்கம் இருந்தது.மற்றபடி, "இது ஒரு நல்ல ஆஃபர். அனைவரும் வாங்கி பயனடைவீர்" என்று அறிவிக்க என் வலைப்பூ விளம்பர தளம் அல்ல.
**********************************************************************
ஓரிறை,ஓர் வேதம் என ஏகத்துவத்தை பின்பற்றும் இஸ்லாமியர்கள் ஏன் ஹனபி,ஷாபி(இந்தியாவில்), சன்னி,ஷியா ( இராக்கில்) என பல்வேறு குழுக்களாக பிரிந்து கிடக்கின்றனர்.இந்த பிரிவினைகளை இஸ்லாம் ஆதரிக்கிறதா ?? இஸ்லாத்தில் சாதீயம் என்ற ஒரு கருத்து இருக்கிறதா ??
இதற்கு பதில் "நிச்சயமாக இல்லை" என்பதே.மேலும் இந்த நெறிமுறைகளின் வீரியம் கொஞ்சம் அதிகம்.
இதற்கான ஆணித்தரமான விடை குர்ஆனில் இருக்கிறது.
"நிச்சயமாக எவர் தம்முடைய மார்க்கத்தை ( தம் விருப்பப்படி பலவாறாகப் பிரித்து) பல குழுக்களாக பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே !) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை;அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது.அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்."
6:159 ஸூரத்துல் அன் ஆம்.
மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது சந்ததியினர் 72 பிரிவுகளாக பிரிந்து பிளவுபடுவார்கள் என கணித்துள்ளார்.அவர்கள் அனைவரும் நரக நெருப்பில் விழக் கடவது எனவும் சபித்துள்ளார்கள்.இவைகள் மட்டுமின்றி அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் இறைவன் இதே கருத்தை வலியுறுத்துகிறான்.
இந்த மத்ஹபுகள் குறித்து ஒரே பதிவில் எழுதுவதென்பது இயலாத காரியம்.
சுருங்கக் கூறின், இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின் நீட்சியான ஃபிக்ஹு என்னும் சட்டத்தை நான்கு பிரிவுகளாக நான்கு இமாம்கள் உருவாக்கினர்.இமாம் ஹனஃபி,ஷாஃபி,மாலிகி,ஹம்பலி இந்த நான்கும் சன்னி பள்ளியின் கீழடங்கும் சட்டங்கள்..இந்த மத்ஹபுகளை பின்பற்றுவர்கள் நாளடைவில் பல்வேறு குழுக்களாக பிரிந்து வழக்கம் போல, குழுமனப்பான்மைக்கே உரிய நடவடிக்கைகளில் இரங்க ஆரம்பித்து விட்டனர்.
சதாம் ஹூசைன் சன்னியை சேர்ந்தவர் என்பதால், ஷியா நீதிபதியை வைத்து அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றி,இரு பிரிவினர்க்கும் ஏற்கெனவே புகைந்து கொண்டிருக்கும் பகை நெருப்பில் எண்ணெய் ஊற்றி வேடிக்கை பார்ப்பது அமெரிக்க அரசின் ராஜ தந்திரம் என்பது தனிக்கதை.
இந்தியாவில் இந்த பிரிவுகள் இருந்தாலும்,இது வெறும் பெயரளவில் மட்டுமே இருக்கிறது.மற்றபடி,திருமணம் உள்ளிட்ட எந்த சம்பிரதாயங்களிலும் இந்த மத்ஹபுகள் குறித்து முஸ்லிம்கள் பெரிதாக அலட்டி கொள்வதில்லை.ஆனால் உண்மையை புரிந்து கொள்ளாதவர்கள் இதை ஒரு சாதி பிரிவினை அளவுக்கு முக்கியத்துவம் தருவது வருத்தமளிக்கிறது.
ஆகவே,இஸ்லாம் என்ற ஒரு மார்க்கத்தில் பிரிவினைகளும் ஏற்றத்தாழ்வுகளும் இல்லை.சாதிகளோ குழுக்களோ இல்லை.
யாரோடு யார் வேண்டுமானாலும் தோளோடு தோள் சேர்த்து மஸ்ஜிதில் தொழலாம்.வேதம் ஓதலாம்.ஒரே தட்டில் உணவருந்தலாம்.ஒரே குவளையில் தண்ணீர் குடிக்கலாம்.
குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்தான் தொழுகை நடத்த வேண்டும் என்ற உயர்சாதிய கோட்பாடுகள் இங்கு செல்லாது.இஸ்லாத்தை ஏற்று கொண்ட யாராக இருந்தாலும் ( விஷயம் தெரிந்திருக்கும் பட்சத்தில் ) மறுகணமே தொழுகை நடத்தலாம்.
மேற்கூறிய சன்னி,ஷியா,மாலிகி போன்றவை வெறும் கொள்கைகளின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களே அன்றி அவைகள் சாதிகளோ வகுப்புகளோ கிடையாது.
மதங்கள் அனைத்தும் ஆகாயத்தில் தொங்கி கொண்டிருக்கும் கோட்டைகள் என்று மதங்களின் பலவீனத்தை சொன்ன பெரியார்,தீண்டப்படாதவர்களுக்கான ஒரே தீர்வாக இஸ்லாத்தை மட்டுமே பல தருணங்களில் குறிப்பிட்டதற்கும் காரணங்கள் இல்லாமலில்லை.
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வாங்கிய போது கருப்பர் என்ற நிறவெறியின் காரணமாக அமெரிக்க அரசால் நிராகரிக்கப் பட்ட குத்துச்சண்டை வீரர் கேஸியஸ் கிளே, ஓக்லஹாமா நதியில் தனது பதக்கத்தை தூக்கி வீசிவிட்டு பிற்காலத்தில் முஹம்மது அலியாக மாறியதற்கு காரணங்கள் இல்லாமலில்லை.
*****************************
Wednesday, May 6, 2009
இஸ்லாத்திலும் சாதிகளை புகுத்தாதீர் !!!!


0 comments:
Post a Comment