Sunday, April 26, 2009

உச்சத்தை தொட்ட தினம்

தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் ஆதிமூல கிருஷ்ணன்(தாமிரா) அவர்களுக்கு நன்றி.

இது என்னுடைய முதல் சிறுகதை முயற்சி .நேரமிருந்தால் முழுமையாக படித்து விட்டு பிறகு பின்னூட்டமிடவும்.தொடர்பதிவுக்கு நான் அழைப்பது நண்பர் ஆதவன்.

**********************************************************************************

"வாட்டர் போர்டுல வேலை செஞ்சிண்டுருந்தவர்க்கு இன்னும் நாலு வருஷம் சர்வீஸ் இருந்துச்சு..வி ஆர் எஸ் கொடுத்துட்டூ வர்ற காசுல கடனை அடைச்சிட்டு, இவள ஒருத்தன் கையில புடிச்சி கொடுத்துடலாம்னு ஆசைப்பட்டாரு.நிராசையில போய் சேர்ந்துட்டாரு !!!

தெத்து பல்லா இருந்தாலும் பரவாயில்ல..ஆனா இவ பைத்தியம் பிடிச்ச மாதிரி எங்க போனாலும் நேரங்காலம் தெரியாம வெடிச் சிரிப்பு சிரிச்சி வைக்கிறா.இருபத்தெட்டு வயசாகுது.பொண்ணு பாக்க வர்றவா முன்னாடி இப்படி சிரிச்சி வைச்சே பல வருஷங்கள கடத்திட்டா..பிள்ளையாண்டா ஆத்துக்காரங்க கால் பண்றேம்மானு சொல்வாங்க.. அதோட வர்றவே மாட்டாங்க..பெத்த வயிறு பத்தி எரியுது." குரல் கம்மியது மீனாட்சிக்கு.

வாழ்வின் வண்ணங்களை நான்கு வருடங்களுக்கு முன்பே இழந்து விட்ட மீனாட்சிக்கு ஒரே ஆறுதலாக இருந்தவள் மக‌ள் வித்யா மட்டும் தான்.கணவனை இழந்த பெண்களுக்கு தவறாமல் மறுகணமே அந்த அக்ரஹாரத்தில் அடைமொழி ஆஸ்கர்கள் ரெடியாகிவிடும்.த‌ற்ச‌ம‌ய‌ம் அந்ந ஏளன‌ப் பேச்சுக‌ளும் அவ‌மான‌ங்க‌ளும் அம்மாவிட‌மிருந்து ம‌க‌ள் வித்யாவுக்கு மாற்ற‌ல் ஆகி இருந்தது.வயதுக்கு வந்த பெண்ணை வீட்டில் வைத்தால் கிளம்பும் புற்றீசல் புரளிகளும்,அவதூறு பேச்சுக்களும் கிளப்பி விடுபவர்களுக்கு அலாதி சுகத்தை ஏற்படுத்தி தரும்.

போற வர்றவா கிட்டல்லாம் இத சொல்லி புலம்புறதே அம்மாவுக்கு வேலையா போச்சு.மனதுக்குள் கண்டனக் கடிதம் வாசித்தாள் வித்யா.

"சொல்லும்மா வித்யா..இந்த சிரிப்பு தான் உனக்கு பிரச்சினையா ??" எத்தன நாளா ?"

சாய்வான நாற்காலியில் அந்நியன் அம்பியை நாசர் படுக்க வைத்த மாதிரி வித்யாவை சாய்வாக உட்கார வைத்து விட்டு கவுன்சிலிங் செஷனை ஆரம்பித்தார் டாக்டர் குஞ்சித பாதம்.

வீணையின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு கம்பிகளை இழுத்தி கட்டியிருப்பது மாதிரி, டாக்டரின் வழுக்கை தலையில் ஒரு காதிலிருந்து மற்றொரு காதிற்கு இருந்த நான்கே முடிகளை வீம்புக்கு இழுத்தி கட்டி வைத்திருந்ததை.. சாரி.. சீவி வைத்திருந்ததை பார்த்ததும் வித்யாவுக்கு வழக்கம் போல அடக்க முடியாமல் சிரிப்பு வந்து விட்டது.

"இப்ப‌டித்தான் டாக்ட‌ர்...எதையாவ‌து நினைச்சுண்டோ..இல்ல‌ எதையாவ‌து பாத்துண்டோ கெக்க‌ பெக்கேனு சிரிக்க‌ ஆர‌ம்பிச்சுட்றா. " மீனாட்சி.
சிறு பிராய‌த்திலிருந்து இந்த‌ சிரிப்பு வியாதி வித்யாவிற்கு ஒரு பெரும் பிர‌ச்ச‌னையாக‌வே இருந்த‌தில்லை.ஆனால் வ‌ள‌ர‌ வ‌ள‌ர‌ இந்த‌ ப‌ழ‌க்க‌ம் முற்றி போய் ஒரு வியாதி போல் ஆகி விட்ட‌து.சிரிக்கும் போது தென்ப‌டும் நீள‌ ப‌ற்க‌ளும் தெரிக்கும் எச்சிலும் பார்ப்ப‌வ‌ர்க‌ளுக்கு ஒரு அருவ‌ருப்பை ஏற்ப‌டுத்தி விடும்.அப்பா தவறியதிலிருந்து இதுவரை தள்ளிப் போன வரன்களின் எண்ணிக்கை மட்டும் நூறைத் தாண்டும்.

***************************


"அது என்னவோ தெரியலடி..தனியா இருக்கும் போது இந்த கவலையும் அழுகையெல்லாம்..அதுவும் அம்மாவ நினைச்சா மட்டும் தான்.என்ன பத்தி மத்தவா கேவலமா சொல்றத அம்மா கேட்டுட்டூ வீட்டுக்கு வந்து விம்மும் போது தான் எனக்குண்டான பிரச்சனையே எனக்கு தெரியுது."

"வித்யா.நீ கூட இவ்ளோ சீரியஸா பேசுவியா ??" கண்களில் வியப்பு மிளிர கேட்டாள் ஸ்வாதி.

"ஆமாண்டி..நானும் எவ்வளவோ ட்ரை பண்ணி பாத்துட்டேன்.இந்த பாழாப்போன சிரிப்ப அடக்க..சிரிப்பு வரும் போது, மூச்ச இழுத்து பிடிச்சுட்டு, என்னிக்காவது நடந்த சோக சம்பவத்த நினைச்சுக்கோனு டாக்டர் சொன்னாரு..லைஃப்ல எனக்கு என்னிக்கு தான் சந்தோஷமா நடந்துர்க்கு..னு மனசுல நினைச்சுண்டேன்.

இப்படித்தான் போன மாசம் கோபு மாமா செத்த வீட்டில எல்லோரும் கண்ணீரும் கம்பலையுமா நின்னுட்ருந்தா.நம்ம ஃபேஷன் சேன்னல் தாத்தா மட்டும் ஒரு ஓரமா நின்னுட்டூ, ஆபரேசன் பண்ண ஒரு கண்ண மூடிட்டு, ஸ்டைலா சுருட்டு புடிச்சிட்டுருந்தத பாத்தவுடனே கொல்லுனு சிரிப்பு வந்துட்டுது.ஓடிப்போய் உள்ரூம்ல தலவாணில முகத்த புதைச்சிண்டு நான் பாட்டுக்கு சிரிக்க ஆரம்பிச்சுட்டேன்.எல்லாரும் நான் குழுங்குறத பாத்துட்டு "என்னமா அழுவுறா..பாருங்கோ !!!....இருக்காதா பின்ன..சின்ன வயசுலர்ந்து வளர்த்தவர் இல்லையா"னு தப்பா நினைச்சுட்டா..தப்பிச்சோம்டானு நானும் அப்படியே மெயிண்டெய்ன் பண்ணிட்டு முகத்த அலம்பிண்டு கிளம்பிட்டேன்"

"சரி அதவிட்ரீ..நம்ம விச்சு பூனூல் கல்யாணத்துல மந்திரம் சொல்ல வந்தான்ல நம்ம வரது மாமா பையன்..நீ கூட விச்சு காதுல அவன் காயத்ரி மந்திரம் சொல்றச்ச அவன் குடுமிய பாத்து கிண்டல் பண்ணி சிரிச்சிட்டிருந்தியே !!"

"ஆமா அவனுக்கு என்ன இப்ப..அன்னிக்கு என்ன பாத்து முறைச்சிட்டே இருந்தான்..
ஏதாவது பிரச்சினையாயிடுச்சா..? " வித்யாவுக்கு ஆர்வம் மேலிட்டது.

"அதெல்லாம் ஒன்னுமில்லடி..அவன் நம்ம ஆபிஸ் தான்..அதுவும் என்னோட புரொஜக்ட் தான்..நேத்து தான் அவன பாத்து ஐடன்டிஃபை பண்ணேன்.அவன் உன்ன பத்தி தான் கேட்டுட்ருந்தான்.ஏதோ நீ ஜாவா ஆர்டிக்கல் எழுதியிருந்தியாமே..அத பத்தி உன் கிட்ட கூட பேசணும்னு சொன்னான்.." பொடி வைத்தாள் ஸ்வாதி.

*******

அன்று உஜாலா வேட்டியில் டாப்லெஸ்ஸில் இருந்த‌வ‌ன், வான்யூஸ‌ன் மாட‌ல் போல ம‌ல‌ர்ந்த‌ முக‌த்தோடு அம‌ர்ந்திருந்த‌வ‌னை பார்த்த‌தும், வித்யாவின் க‌ண்க‌ள் அவ‌ன் குடுமியை தேட‌ ஆரம்பிக்க‌ துறுதுறுத்த‌ன‌.

"என் பேரு வைத்திங்க‌..விச்சு உப‌ந‌ய‌ன‌த்துல‌ தான் உங்க‌ள‌ முத‌ல் த‌ட‌வையா பார்த்தேன்.விச்சு உங்க‌ள‌ ப‌த்தி நிறைய‌ சொல்லியிருக்கான்.உங்க‌ளுக்கு இன்னும் க‌ல்யாண‌ம் ஆக‌லைன்னும் கேள்விப் ப‌ட்டேன்"

"ச‌ரி இப்ப என்ன‌ சொல்ல வ‌ர்றீங்க !! டைர‌க்டா சொல்லிடுங்கோ.." வித்யாவுக்கு ஆர்வ‌ம் தொற்றி கொண்டாலும் வெளி காட்டி கொள்ள‌வில்லை.

"உங்க‌ள‌ நேக்கு ரெம்ப‌ பிடிச்சிருக்கு" ச‌ட்டென்று போட்டுடைத்தான் வைத்தி.

"இத‌ பாருங்கோ உங்க‌ளுக்கு என் மேல‌ இருக்க‌றது ப‌ரிதாப‌ம். இது ல‌வ் தான்னு நீங்க‌ நினைச்சீங்க‌ன்னா அதுக்கு நான் பொறுப்பில்ல‌..சாரி !!!" வைத்தியின் அடுத்த‌ ப‌திலுக்காக‌ காத்திருக்காமல் கிள‌ம்பினாள் வித்யா.

தன்னைக் கூட காதலிக்க இப்பூவுலகில் ஒரு ஜீவன் இருக்கிறதா என்ற அதிர்ச்சியிலிருந்து மீள வித்யாவுக்கு வெகுநேரம் ஆனது.அந்த புதிய அனுபவம் அவளுக்கு ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியை தந்தது.முதல் முறையாக கண்ணாடி முன் ஒருமுறை நின்று புன்னகைத்து பார்த்தாள்.அவள் முகத்தில் சற்றே அழகு கூடியிருந்தது.கன்னம் சிவந்திருந்தது.

முதல்முறை பார்த்தவுடனே காதலில் விழுபவனை எப்படி நம்புவது? என்ற கேள்வி தான் அவளை வியாபித்திருந்தது.ஆனாலும் பட்டென்று அப்படி அவனிடம் சொல்லியிருக்க கூடாது என்ற சுயபச்சாதாபம் அவளை ஆக்ரமிக்க ஆரம்பித்தது.ஆனாலும் என்னவோ மனம் மதில் மேல் பூனையாகவே நின்று கொண்டிருந்தது.

அவன் மனசு சங்கடப் பட்டிருப்பானா ?? இல்ல..இவ ரொம்ப திமிர் பிடிச்ச பொண்ணுனு கழட்டி விட நினைச்சிருப்பானா ?? இல்ல திரும்பவும் நாளைக்கு கேஃபிடேரியால பேச முயற்சி பண்வானா ??

அன்றைய இரவு முழுதும் வித்யாவுக்கு சர்வம் வைத்தி மயம்.

சொல்லி வைத்தாற் போல மறுநாள் மீண்டும் அவன்.

"அதெப்படி உங்களுக்கு முதல் பார்வையிலே லவ் வரும்??..எனக்கென்னமோ இது சரியா படல" கொஞ்சம் சாரீரத்தை சற்றே தளர்த்தினாள் வித்யா.

"நீங்க நினைக்கிற மாதிரி இது ஒன்னும் லவ் @ பர்ஸ்ட் சைட் இல்லீங்க..!!!" வைத்தியின் பதிலில் கனம் இருந்தது.

"போன மாசம் டவுன்ஹால் மீட்டிங்ல பிரசிடண்ட் பேசிட்ருக்கும் போது சத்தம் போட்டு சிரிக்கிற வெகுளி பொண்ணாவும் உங்கள பாத்துர்க்கேன்.

அதே நேரம் ஆந்திர மெஸ் வாசல்ல பசின்னு வந்து பிச்சை கேட்டுட்டுருந்த ஒரு அந்த சின்ன பொண்ணுக்கு உங்க டிபன் பாக்ஸை கொடுத்துட்டு, பிரண்ஸோட ஷேர் பண்ணி சாப்பிட்ற பெரிய மனசுக்காரியாவும் உங்கள பாத்துர்க்கேன்.

அப்பவே நீங்க தான் என்னோட லைப் பார்ட்னர்னு முடிவு பண்ணிட்டேன்.இதுல என்னங்க தப்பு இருக்கு..நீங்களே சொல்லுங்க வித்யா"

இத்தனை நாள் தொலைத்திருந்த வாழ்வை அவள் கண்களுக்குள் ஊற்றி வைத்தான் வைத்தி.

"சரி என்ன நல்லா பாத்துப்பியா" தழுதழுத்த குரலில் வித்யா.

"ட்ரை பண்றேன்டியம்மா !!!" வைத்தி.

முதல்முறையாக வித்யாவுக்கு அழுகை வரத்துடித்தது.அவனை கட்டியணைத்து கொள்ள வேண்டும் போல இருந்தது.க‌ண்ணீர்த்திரை அவள் கண்களை மறைத்தது.

அதனால் என்ன‌ ? அவ‌ன் தான் உள்ள‌த்தில் விசுவ‌ரூப‌ம் எடுத்து நிற்கிறானே !!!


*******************************************************************************

0 comments:

Post a Comment

 
Powered by Blogger | Printable Coupons