மூடிவைக்கப் பட்ட புத்தகக் குவியலை
சுமந்து கொண்டிருக்கும்
அலமாரி போல் ஆனது மனம்
அவள் நினைவுகளை சுமந்து கொண்டு..
உடைந்து போன கனவுகளை
உறைபனி நிலையில் பத்திரமாக
பதப்படுத்திக் கொள்ள
மீண்டும் மீண்டும் முயன்று
தோற்றுத் திரும்பின உறக்கங்கள்.
கலைந்தும் சிதைந்தும்
எஞ்சியிருந்த ஒன்றிரண்டு
வார்த்தைகளை வார்த்தெடுத்து
ஓர் பிரிவு உபசாரத்திற்கு
நிவேதனமாக்கி கொண்டிருந்தோம்
அந்த ஒற்றை இரவில்...
அவள் அழுகை
சத்தமாக சிரிக்கத் தொடங்கியது
என் சிரிப்பும் சிறிது
அழுது பார்த்தது.
'எங்கிருந்தாலும் வாழ்க' வென
வியங்கோள் வினைமுற்று விகுதியிட்டு
முடிக்க இலக்கணம் மறந்துபோனது
இருவரின் மொழியிலும்.
பெருங்கூச்சலிட்ட நிசப்த
சாரீரங்களை கொண்ட
நாழிகைகளை கடத்தி,
சற்று தாமதமாகவே விடிந்தது
அந்த ஒற்றை இரவு.