
"இப்பவே பாக்கணும் போல இருக்குடா"
"எத்தன நாள் தான் போன்லயே பேசுறது"
"எனக்கு மட்டும் பாக்கணும்னு தோணாதா என்ன ??"
எல்லா காதலர்களின் முதல் சந்திப்புமே இது போன்ற ஏக்கப் பிரகடனங்களில் தான் ஆரம்பிக்கும்.நாங்கள் மட்டும் விதி விலக்கா என்ன?
இடம்,பொருள்,ஏவல்,சேவல் எல்லாம் தேர்வு செய்து ஒரு மனதாக முடிவெடுத்தோம்.
இடம்:ஆள் அரவம் அதிகம் இல்லா ஒரு ரயில் நிலையம்.
நேரம்: மதியம் 1.30 முதல் கெஞ்சல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை.
அவசரம் அவசரமாய் எல்லாம் ஒன்றுமில்லை.மதியம் பன்னிரெண்டை தொடுமுன் கடிகார முட்களை மானுவலாக திருப்பாத குறை தான்.
கருஞ்சாம்பல் நிற ஜீன்ஸ்,பிராண்டட் சட்டை,ரீபோக் ஷுஸ்,ப்ரில் கீரீம்,ஆக்ஸ் ஸ்பிரே மற்றும் சில புன்னகைகள் என்னை ஒரு புதிய பரிமாணத்தில் ஆயத்தமாக்கி கொண்டிருந்தன. போருக்கு தயாராகி கொண்டிருந்த ஒரு படைவீரனின் கைகளில் சில கேட்பரீஸ் டெய்ரி மில்க்குகள்.
ஒரு வழியாக படியாத தலைமுடியை படிய வைத்து சீவி கிளம்பியாகிவிட்டது.வேண்டுமென்றே முதல் ரெண்டு ரயில்களைத் தவற விட்டு,மூன்றாவது ரயிலில் அமர்ந்தவனுக்கு நேற்று அலைபேசியில் அவளிடம் பரிமாறிய குறுந்தகவல்கள் மீண்டும் ஒருமுறை நினைவுக்கு வந்தன.
"நான் தான் முகத்தை மறைத்திருப்பேனே..என்னை எப்படி கண்டு பிடிப்ப ??"
"ஆயிரம் கண்களிலே என் தேவதையின் கண்களை மட்டும் என்னால் கண்டு பிடிக்க முடியாதா என்ன?"??"""
அதற்குள் அலைபேசி அதிர.. அவளாகத் தானிருக்கும்..அவளே தான்..
"எங்கடா இருக்க ??"
"பழவந்தாங்கல் கிட்ட வந்துட்டேன்..இன்னும் பத்து நிமிஷம் ஆகும்.நீ எங்க இருக்க?"
"நான் மீனம்பாக்கம் வந்து 15 வருஷம் ஆச்சுடா..சீக்கிரம் வா..நான் இங்க ஒரு போன் பூத் பக்கத்தில நிக்கிறேன்."
"சரி..அங்கயே வெயிட் பண்ணு...வந்துட்றேன்."
இந்த பத்து நிமிட இடைவெளியில் நான் அவளோடு...அந்த அற்புத கணங்களை எப்படி செலவிடப் போகிறேன் என ஒரு சராசரி காதலனாய் மனதுக்குள் சில ஒத்திகைகள் நடந்தேறின.
நிச்சயம் அவள் கண்களைப் பார்த்து தான் பேச வேண்டும்.அவள் உள்ளங்கைகளை அழுத்திப் பிடித்து என் கைரேகை அழித்து,அவள் கைரேகைகளை மீண்டும் என் உள்ளங்கைகளில் நகலெடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
அவள் புன்னகைக்கும் போது,
"புன்னகை சிந்துகிறாயா..இல்லை பூக்களைச் சிந்துகிறாயா ?"
என்ற ஒரு அரிய கேள்வியெழுப்பி அவளின் முதல் செல்ல அடிகளையும் மற்றும் சில'முதல்'களையும் பரிசில் பெற வேண்டுமெனத் தீர்மானித்து கொண்டேன்.
இப்படி கைவசம் இருந்த பலப்பல பிட்டுகளின் பட்டியல் நீண்டது.
இரண்டு முறை அவளைப் பார்த்திருக்கிறேன் என்றாலும் அவள் "அவளாக" இருந்த போது.....இப்போது அந்த அவள் "என்னவள்" ஆகிவிட்டாள் அல்லவா?.
மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் கொஞ்சம் நடுக்கமும் கூடிய ஒரு புதுவித படபடப்பு தொற்றி கொண்டது.இருவரும் காதலைச் சொன்னபிறகு நிகழப் போகும் முதல் சந்திப்பு என்பதால் ஒரு கூடுதல் குறுகுறுப்பு.
வாங்கி வைத்திருந்த மினரல் வாட்டரால் முகத்தில் தண்ணீர் தெளித்து மீண்டும் ஒருமுறை தலை வாரிக் கொண்டேன்.
மீனம்பாக்கமும் வந்தாகிவிட்டது.படபடப்பு அதிகரித்தது.முகத்தில் வழிவது தண்ணீரா வியர்வையா என்றெல்லாம் பட்டிமன்றம் வைக்காமல்,கண்கள் மட்டும் என்னவளைத் தேட ஆரம்பித்தன.
( அடுத்த பாகம் விரைவில் )